இது என்ன தமிழ் மொழியா

இது என்ன தமிழ் மொழியா

இதுஎன்ன தமிழ்மொழியா
பாவலர் கருமலைத்தமிழாழன்

அருந்தமிழில் அம்மாவாம் சொல்லி ருக்க
—–அதைவிடுத்து மம்மியென்றே அழைக்கச் சொல்வர்
வருகவென அழைப்பதற்குத் தமிழில் நல்ல
—–வம்மின்னாம் சொல்லிருக்கக் கம்மின் என்பர்
திருவாயால் சோறென்று கேட்டி டாமல்
—–திருவிழக்க ரைசென்றே விளம்பு வார்கள்
தெருவினிலே நண்பருடன் பேசும் போதும்
—–தெரியாத ஆங்கிலத்தில் உளறு வார்கள் !

அங்காடிப் பெயர்களினைத் தமிழெ ழுத்தில்
—–ஆங்கிலத்தை அப்படியே எழுதி வைப்பர்
தங்களுடை குழந்தைகட்கு மூச்சு முட்டும்
—–தமிழல்லா வடமொழியில் பெயரை வைப்பர்
மங்கலமாய் இசைதன்னைத் தெலுங்கில் பாடி
—–மாத்தமிழை இறைவனுக்கும் ஆகா தென்பர்
எங்கெங்கும் தமிங்கிலராய்த் தம்மைக் காட்டி
—–ஏற்றந்தான் வருமென்று பிதற்று வார்கள் !

சின்னதிரை பெரியதிரை செய்தித் தாளில்
—–சீரழியும் தமிழ்மொழிதான் கேட்க மாட்டார்
நன்றாக இருந்ததமிழ்க் கல்வி தன்னை
—–நாடாள்வோர் வெளியேற்றத் துணையாய் நிற்பர்
சென்றுவிட்ட ஆங்கிலேயன் கால்க ளுக்கே
—–சென்னிதாழ்த்தி இன்றும்தாம் அடிமை என்பர்
என்றாலும் தம்முடைய நெஞ்சைத் தட்டி
—–எம்தமிழ்தான் தொன்மையென்றே முழக்கம் செய்வர் !


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *